ஞாயிறு, 13 ஜூன், 2010

காதல் என்பது.........

வணக்கம் நண்பர்களே,
இன்று ஞாயிற்று கிழமை. வேலை ஏதும் இல்லாததால் அறையில் தனியாக இருந்த போது காதலை பற்றி சிந்தனை ஓடியது. அந்த சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.( மண்டபத்துல யாரும் எழுதி தரவில்லை)

மனித வாழ்வில் முக்கியமான உணர்வு காதல். காதலாலே பூமி வந்தது என்கிறது தமிழ் பாடல். நமது சங்க இலக்கியங்களில் காதலை மிக அருமையாக சொல்லியிருப்பார்கள்.

பிறப்பில் இருந்து இறப்பு வரை ஏதேனும் ஓர் காலகட்டத்தில் காதலுக்கு ஆட்படதவர்களே இல்லை எனலாம்(சில தீர்க்கதரிசிகள் மட்டும் விதிவிலக்கு).

காதலுக்கும் நட்பிற்கும் ஒரு மெல்லிய நூழிலைத்தான் எல்லைக்கோடாக உள்ளது.

அந்த எல்லை கோட்டின் பெயர் பாலுணர்வு. பாலுணர்வு இல்லையெனில் அது நட்புதான். பாலுணர்வு இல்லாத காதல் காதலே அல்ல(என் ஆளு மேல எனக்கு எந்த தப்பெண்ணமும் இல்லை என்று யாரேனும் கூறினால் அது உடான்ஸ் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்).

அதுக்காக எப்பவுமே அந்த(பாலுணர்வு) எண்ணத்தோடுதான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.காமம் அடிமனதில் இருக்கும். மேல்மனத்தில் நட்பே ஓங்கியிருக்கும்.

ஒருவரை ஒருவர் ஆழ்ந்த புரிதலோடு, உடுக்கை இழந்தவன் கைபோல் உதவும் நட்புணர்வோடு, துணைவரின் நிறைகளை கண்டு மகிழும் மனதைப்போல், அவரின் குறைகளையும் ஏற்றுக் கொள்ளும் மனதை பெற்றிருப்பவர்களே காதலர்கள்.

பதின் பருவத்தில்(டீன் ஏஜ்) வரும் காதலை இனக்கவர்ச்சி என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். ஏனெனில் பெரும்பாலும் எதிர்பாலின ஈர்ப்பு மட்டுமே.
இப்படிபட்ட காதல் பெரும்பாலும் தோல்வியிலே முடியும்.

கண்டதும் காதல்.
கண்டதும் காதல் சாத்தியமா என்றால்? சாத்தியமே என்கிறது சமீபகால உளவியல் ஆராய்ச்சிகள்.

ஒருவரை கண்டதும் அவரிடம் மனதை பறிகொடுப்பது பலரது வாழ்வில் நடந்திருக்கிறது. மற்றவருக்கு சுமாராக(டம்மி பீஸ்) தெரிபவர் நமக்கோ பேரழகாக தெரிவார். நம்மையும் அறியாமல் நமது மனது அவரிடம் செல்லும்.

அது ஏனெனில் நம்முடைய ஆழ்மனதில் நமது வாழ்க்கைதுணைவராக வருபவர் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணியிருகிறோமோ அந்த எதிர்பார்ப்புகளோடு அவர் பொருந்தி போயிருப்பார். அதுதான் காரணம்.

சில ஜோடிகளை பார்த்திருப்போம். பெண் பேரழகியாகவும் பையன் சுமாராகவும் இருப்பான், அல்லது பெண் சுமாராக இருப்பாள், பையனோ பேரழகாக( ஹி ஹி என்னைப்போல்) (சில சமயங்களில் உண்மையை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்) இருப்பான்.

அப்படிப்பட்டவர்கள் மனமொத்த தம்பதியினராய்இருந்தால் அதற்கு காரணம் நம் மேலே கண்டதுதான்.

காதலில் தோல்வி என்பது.....
என் காதல் தோற்றுவிட்டது என்று யாரேனும் கூறினால் அது தவறு . மாறாக அங்கே காதலனோ அல்லது காதலியே தோற்று இருக்க வேண்டும் .
எப்படியெனில் ஒருவன் தன் காதலை ஒரு பெண்ணிடம் தெரிவித்து அவளின் சம்மதத்தை கோருகிறான். அவள் மறுத்து விடுகிறாள் எனில் அங்கே தோற்று போவது காதலன்தான்.. காதல் அல்ல.......

ஏனெனில் அந்த பெண் காதலிக்காமலே இருக்க போவதில்லை. திருமணமான பின் தன் கணவனை காதலிப்பாள் அல்லது வேறு வேறு யாரையாவது காதலித்துக்கொண்டு இருக்கலாம்.

அவளிடமும் காதல் என்ற உணர்வு இருக்கும். ஆனால் காதலிப்பவரைதான் ஏற்றுகொள்ளவில்லை.

இதுபோலத்தான் ஒரு பெண் தன்னுடைய காதலை ஆணிடம் வெளிப்படுத்தி அவன் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அங்கே தோற்றுப்போவது காதலிதானே ஒழிய காதல் இல்லை.

ஒரு ஆண் தன் காதலை பெண்ணிடம் கூறியபின்பு முதலில் அவள் மறுத்துவிட்டு பின்னர் ஏற்றுக் கொள்கிறாள் (இந்த பொம்பளைங்களே இப்படித்தான் பாஸு).

ஒருவரின் காதலை மற்றொருவர் ஏற்றுக்கொண்டு இருவரும் காதலித்தாலும் அவர்களில் எல்லோருமே திருமண வாழ்வில் இணைகிறர்களா? என்றால் பெரும்பாலோனோர் திருமண வாழ்வில் இணைவதில்லை.( வேறு ஒருவரோடு திருமணவாழ்வில் இணையலாம்).

இங்கேயும் தோற்றுவிடுவது காதல் அல்ல. காதலர்களே.
காதலர்கள் தத்தமது வீட்டில் பெற்றோரின் அங்கீகாரத்தை பெறுவதில் வெற்றி பெற வேண்டும்.

இங்கே சாதி,இனம்,பொருளாதாரம்,அந்தஸ்து ஆகியவை தடையாக இருக்கும். மேற்கண்ட தடைகளில் ஏதேனும் ஒன்றினால் காதலர்கள் பிரிந்தால் அங்கே தோற்று போவது காதலனோ அல்லது காதலியோதானே ஒழிய காதல் தோற்பது இல்லை.

எந்த செயலிலும் வெற்றி வேண்டும் எனில் அங்கே முயற்சி, வைராக்கியம், நம்பிக்கை வேண்டும். காதலிலும் அது தேவை. பொறுமையோடு தங்களின் உணர்வுகளை தங்கள் குடும்பத்தினர்க்கு உணர்த்த வேண்டும். தெரியபடுத்துவது வேறு, உணர்த்துவது வேறு.

அப்படி உணர்த்திய பின்புதான் காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கும். காதலர்கள் திருமண வாழ்வில் இணைவர். அப்படி இணையும்போதுதான் காதலர்கள் வெற்றி பெறுகிறார்கள், காதலும் முழுமை அடைகிறது.

அப்படி திருமணவாழ்வில் இணைந்தவர்களில் சிலர் விவாகரத்து பெறுவதை சமீப காலங்களில் பார்க்கிறோம். இது எதனால் என்றால் தங்கள் துணையின் குறைகளை ஏற்றுகொள்ள முடியாததால்தான்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்கிறது பழமொழி. நூறுசதவீதம் குறைகள் இல்லாத மனிதனே இல்லை என்பது நிதர்சனமான உண்மை. எந்த ஒரு மனிதரிடத்திலும் ஏதேனும் ஓர் குறை நிச்சயம் இருந்தே தீரும்.

அதற்கு காரணம் அவர்கள் வளர்ந்த சூழ்நிலை, மனோபாவம் காரணமாக இருக்கும். அந்த குறைகளை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இங்கே ஒரு விஷயம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நமக்கு குறையாக தெரிவது அவர்கள் பார்வையில் சரியாக தெரியும். இதை நாம் உணரவேண்டும்.

யாராவது நம்மிடம் நீ ஏன் லூசு மாதிரி இருக்கிறாய் ? என்று கேட்கும்பொழுது நான் அப்படிதான் இருப்பேன் என்று சொல்கிறோமோ(இங்கே நாம் குறைகளை நாமே ஏற்றுகொள்கிறோம்) அதுபோல நம்மாளு இப்பிடிதான் என ஏற்று கொள்ள வேண்டும்.


அவர் செய்வது தவறெனில் அதை அவர்களுக்கு உணர செய்ய வேண்டும். தவறை தெரியபடுத்துவது வேறு.
உணர்த்துவது வேறு.

காதலர்களாக இருக்கும்போதே இதை உணர்ந்து கொள்வது சரியானது, காதலர்களா இருந்த காலத்தில் அந்த தவறுகள் அல்லது குறைகள் எல்லாம் எனக்கு தெரியும்தான் ஆனால் அப்பொழுது ஏற்று கொள்ள முடிந்தது ஆனால் இப்பொழுது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ஒருவர் கூறினால் அது தவறு.

காதலர்களாக இருந்த காலத்தில் அந்த குறையை கண்டுகொள்ளவில்லை. அவ்வளவுதான்.
ஏன் கண்டுகொள்ளவில்லை எனில் பினனால் நாம் சொன்னால் மாற்றிக்கொள்வர் என்ற எண்ணம். அல்லது பாலுணர்ச்சி வேகம்.

பின்நாளில் திருமணமான பின்பு பாலுணர்ச்சி வேகம் குறைந்த பின்பு அவர்களின் குறைகள் தெரியும். அப்பொழுதுதான் நமக்கு ஏற்றுக்கொள்ளும் திறன் வேண்டும். விட்டு கொடுத்துதான் ஆக வேண்டும்.( வேறவழியில்லை).

இல்லற வாழ்வு இன்பமாக அமைய கற்பை தவிர எதை வேண்டுமானாலும் விட்டு கொடுக்கலாம் என்கிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.

ஒருவேளை ஏமாற்றபட்டிருந்தால்?
காதலர்களாக இருந்த காலத்தில் ஒருவர் நான் அப்படி, நான் இப்படி என்று ஏகப்பட்ட பில்டப் கொடுத்திருப்பார். திருமணமானபின்பு அவரின் சுயரூபம் தெரியும்போது அவரின் குறைகளை ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தால் ஏற்றுக் கொண்டு வாழலாம்.

ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும் பட்சத்தில் விவாகரத்தே சிறந்தது.ஒருதலை காதல்.
இதை பற்றி விரிவாக இன்னொரு கட்டுரை எழுதுகிறேன். எனினும் இப்பொழுது சில எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
தங்களின் காதலை காதலியோ அல்லது காதலனோ ஏற்றுக்கொள்ளவில்லையெனில் பொறுமையோடு தங்களின் காதலை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்களின் மன உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை அவர்களுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகிவிட்டால் மனம் கலங்கத்தான் செய்யும். அப்பொழுது இவர்தான் உலகின் கடைசிப்பெண் (அல்லது)ஆண் இல்லை என்ற என்னத்தை மனதில் ஆழ பதிக்கவேண்டும். அதுதான் உண்மையும் கூட. நமக்குன்னு இருந்தால் நமக்குத்தான்.


அண்ணன் வைகைபுயல் வடிவேலுவின் மொழியில் சொல்வதென்றால் த்ரிஷா போன திவ்யா என்று மனதை பக்குவபடுத்தி கொள்ள வேண்டும்.


ஒரு மொக்க டயலாக்.
(வழங்குவோர் வருத்தமில்லா வாலிபர் சங்கம்)
மங்கி. த்ரிஷா போன திவ்யா? அப்ப திவ்யாவும் போனா?
சங்கி. திவ்யா போன காவ்யா.
மங்கி. காவ்யாவும் போனா?
சங்கி. காவ்யாவும் போனா ரம்யா.
மங்கி. ரம்யாவும் போனா?
சங்கி. ரம்யாவும் போனா லாவண்யா.
மங்கி. லாவண்யாவும் போனா?
சங்கி. ங்கொய்யாலஉன் மூஞ்சிக்கு எந்த பிகரும் செட் ஆகாது. ஒழுங்கா அம்மா,அப்பா பாக்குற பொண்ண ஏத்துக்க

புதன், 9 ஜூன், 2010

என்னை பற்றி.

வணக்கம் அன்பர்களே,
வாழ்க வளமுடன். என் பெயர் சி.அயோத்திராமன். சொந்த ஊர் மதுரை அருகே அலங்காநல்லூர். திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றுகிறேன்.என் வயது ஆன்மிகம் சம்பந்தமாக பேசுவதெனில் ஐம்பதுக்கு மேல், காதல்,கவிதை, சம்பந்தமாக பேசுவதெனில் பதினாறுதான்.வலைபதிவில் எழுதுவதன் நோக்கம், இயல்பாகவே எனக்கு மொக்கை போடுவதெனில் அலாதி பிரியம். அதுவும் புதிதாக ஏதேனும் ஒரு செய்தியை தெரிந்து கொண்டால் யாரிடமாவது பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும். இல்லையேல் அடியேனுக்கு தலை வெடித்து விடும். நேர்முகமாக மொக்கை போடுவது இன்னும் சலிக்கவில்லை என்றாலும் இணையதளத்தில் மொக்கை போட்டால் என்ன? என்று அடியேனின் உள்மனது சொன்ன காரணத்தால் இப்படி எழுத வேண்டியதாயிற்று. புத்தகங்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டது, இணையதளங்களில் நான் தேடிக் கிடைக்காத மற்றும் நான் தேடித் தெரிந்து கொண்ட விஷங்களையும், என்னுடைய அனுபவங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அடுத்தடுத்து வர இருப்பவை அடியேனின் கட்டுரைகள், யோகா, தியானம், போட்டி தேர்வுகளை பற்றிய விஷயங்கள்,வரலாறு, பொதுஅறிவு, உபநிடதங்களின் தமிழ் மொழிப்பெயர்ப்புகள், பொதுவுடைமை சித்தாந்தம், ஸ்ரீமத் பகவத்கீதை, ஆன்மீக கட்டுரைகள், புத்த மதத்தின் புனித நூலான தம்மபதம், உளவியல், நான் எழுதிய கவிதைகள் (காதல் கவிதைகளும்தான் ). அனைத்தையும் படித்துவிட்டு பதிலுக்கு நீங்களும் மொக்கை(உங்களின் கருத்துகள்) போடுமாறு கேட்டு கொள்கிறேன். வாழ்க வளமுடன். நன்றி .

வியாழன், 3 ஜூன், 2010

வாழ்க வளமுடன்.

வாழ்க வளமுடன்.
நண்பர்களே இதுதான் எனது முதல் இடுகை. இந்த உடலை எனக்கு அளித்த என் பெற்றோரையும், தன்னை அறியும் கலையை எனக்கு கற்று கொடுத்த என் குருதேவர் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களையும் வணங்கி எழுதுகிறேன். பொதுவாக வாழ்த்துவது என்றால் எதோ பெரியோர்தான் வாழ்த்த வேண்டும் என்று தவறாக கருதுகிறோம். ஆனால் அது சரியான கருத்து அன்று. மாறாக யாரும் யாரை வேண்டுமானாலும் வாழ்த்தலாம். யாரேனும் நமக்கு தீமை செய்தால் நமது உதடுகள் சாபமே கொடுக்கும்.அது சரியானதா என்று சற்று ஆராய்ந்தால் சரியானதல்ல என்பதே நம் மனசாட்சி சொல்லும் பதிலாகும். எப்படி எனில் வினையின்றி விளைவில்லை எனதுதான் உண்மை. பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களில் ஒருவர் நன்றாக படிக்கிறார் மற்றொருவர் படிப்பின் மீது போதிய கவனம் செலுத்தாமல் ஏனோ தானோ என்று படிக்கிறார். இருவரில் யார் தேர்ச்சி பெறுவார் என்பது நாம் அறிந்த உண்மை. ஒருவர் செய்யும் செயலை கொண்டே அவரின் எதிர்கால வாழ்வு நிர்ணயிக்கப் படுகிறது. ஆக இப்போது ஏதேனும் நமக்கு இன்பமோ அல்லது துன்பமோ வந்தால் அது நமது கடந்த கால செயலின் விளைவேயாகும். எது எப்படி இருப்பினும் அதை ஏற்று கொண்டு அதற்கு தக்கபடி செயல் பட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். எப்படி நமது வெற்றிக்கு துணையாக இருந்தவர்களை வாழ்த்துகிறோமோ அவர்களை நன்றியோடு நினைவு கூறுகிறேமோ அது போல் நமது தோல்விக்கு காரணமானவர்களையும், நமது வெற்றிக்கு தடையாக இருந்தவர்களையும், நாம் வாழ்த்த வேண்டும். ஏனெனில் நமது வெற்றிக்கு நமது முன்வினை காரணமெனில் தோல்விக்கும் முன்வினையே காரணமாகும். எனவே நமது வினை(கர்மா) ஒன்றை அகற்றிய அவரை வாழ்த்துவதே சிறந்தது. வாழ்த்துவதற்கு வயதோ பதவியோ தகுதியே ஏதும் இல்லை. அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே போதும். எல்லோரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றறியேன் பராபரமே என்று பிராத்தனை செய்வோம். வாழ்க வையகம், வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்.